Tuesday, November 13, 2012

துப்பாக்கி - Cable Sankar | Thuppaki Reviewமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது  உடைத்து வெற்றியடையாதா? என்ற கேள்விக்கு இந்த துப்பாக்கி பதில் சொல்லியிருக்கிறது. 

மிலிட்டரியில் வேலை பார்க்கும் விஜய் மும்பையில் வசிக்கும் தன் குடும்பத்தினருடன் லீவைக் கழிக்க வருகிறார். வந்த இடத்தில் தீவிரவாதிகள் பாம் வைத்துவிட, அதை வைத்தவனை பிடித்து விசாரிக்கும் போது மும்பையில் தொடர் குண்டு வெடிப்புக்கு ப்ளான் செய்யப்பட்டிருப்பது தெரிந்து அதை விஜய் முறியடிக்கிறார். யார் தன் மிஷனை இப்படி முறியடித்தான் என்று கண்டுபிடிக்க, வில்லன் விஜய்யை தேட, விஜய் வில்லனைத் தேட, முடிவு என்ன ஆனது என்ற சின்ன லைன் தான். அதை பரபர ஆக்‌ஷனில் பொறி பறக்க விட்டிருக்கிறார்கள்.

விஜய் படம் முழுக்க அண்டர்ப்ளே செய்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். அநாவசிய பஞ்ச் டயலாக் கிடையாது. குத்துப் பாட்டு கிடையாது. ஆனால் படம் முழுவதும் பார்க்க அழகாகவும், ஒரு விதமான குதூகலத்தோடும் இருக்கிறார். தீவிரவாதிகளுடன் மோதும் இடங்களில் ஆக்‌ஷன் பொறி பறக்கிறது. காஜலுடன் காதல் செய்யும் போது கண்களில் குறும்பு கொப்பளிக்கிறது. ரொம்ப நாள் கழித்து விஜய்யின் நடிப்பை என்ஜாய் செய்து பார்க்க முடிந்தது. ஆனால் ஏனோ தெரியவில்லை கூகுள் பாடல் உட்பட நடனத்தில் பெரிய அளவில் விஜய் ஸ்கோர் செய்யவில்லை என்றே தோன்றுகிறது.
காஜல் அகர்வாலுக்கு தமிழ் சினிமாவின் வழக்கப்படி லூசுப் பெண் கேரக்டர். விஜய்யிடம் முத்தம் கேட்கும் போது லேசாய் கிரங்க வைக்கிறார். மற்றபடி வெறும் டான்ஸிங் டாலாய்த்தான் வருகிறார். சத்யன் ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுகிறார். வில்லனின் நடிப்பு பெரிதாய் இல்லாவிட்டாலும் திரைக்கதையில் அவருடய கேரக்டருக்கான முக்யத்துவத்தால் பெரிய இம்பாக்ட் கிடைத்துவிடுகிறது.

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் புதிதாய் ஏதுமில்லாவிட்டாலும் படத்துக்கு தேவையான அளவிற்கு சிறப்பாகவே இருக்கிறது. சண்டைக் காட்சிகளில் ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் நல்ல வேகம். இசை ஹாரிஸ் ஜெயராஜ். இவரிடம் உள்ள இருபது பாடல்களின் டுயூன்களையே இன்னும் எத்தனை படத்திற்குத்தான் போடுவார் என்றே தெரியவில்லை. கூகுள்.. கூகுள் பாடலைத் தவிர சொல்லிக் கொள்கிறார் போல ஏதுமில்லை. குறிப்பாய் பின்னணியிசை  வேறு யாரையாவது போட்டு பின்னணியிசை அமைத்திருக்கலாம் முடியலை.
படத்தின் பலமே ஏ.ஆர்.முருகதாஸின் திரைக்கதைதான். ஒரு சின்ன லைனை படு சுவாரஸ்யமாய் சொன்னதுமில்லாமல் வழக்கமான விஜய்யை காட்டாமல் கொஞ்சம் அடக்கி வாசித்துள்ள விஜய்யை காட்டியிருப்பதில் ஜெயித்தும் இருக்கிறார். இடைவேளையில் பன்னிரெண்டு தீவிரவாதிகளை பிடித்துக் கொல்வதிலிருந்து படம் முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல், மேக்கிங்கிலாகட்டும், திரைக்கதையிலாகட்டும் சுறு சுறு விறுவிறு பட்டாசாய் பறக்கிறது. தீவிரவாதிகளை பிடிக்கும் ஐடியா சுவாரஸ்யம். “உயிரை எடுக்கிற அவனுக்கே அவன் உயிரைப் பத்தி கவலப் படாதப்போ.. காப்பாத்துற நான் எதுக்கு ப்யப்படணும்” என்கிற வசனம்  ஜிவ்வென இருக்கிறது.

படத்தின் மைனஸ் என்று பார்த்தால் ஆங்காங்கே ஸ்பீட்ப்ரேக்கராய் வரும் பாடல்களும், படத்தின் நீளமும்தான். நீளத்திற்கு காரணம் முதல் பாதியில் வரும் காதல் காட்சியும், ஜெயராமை வைத்து காமெடி என்று நினைத்து வைத்த காட்சிகளும் தான். கிட்டத்தட்ட அந்த காட்சிகளில் தூக்கமே வர ஆரம்பித்துவிட்டது. குறிப்பாய் க்ளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் ஹைஃஸ்பீடில் ஒரு மெலடி தேவையா? அதுவும் ஏற்கனவே கோவில் கேட்ட வெண்பனியே பாடல் ட்யூனில். லாஜிக்கலாய் நிறைய லூப் ஹோல்கள், க்ளைமாக்ஸ் டெம்ப்ளேட் சண்டைக்காட்சி, மோசமான EFX, ஆகியவை இருந்தாலும்,  வெறும் மசாலாவாய் ஒரு மாஸ் படத்தைக் கொடுக்காமல் வித்யாசமான விஜய்யையும், ஒரு சுவாரஸ்ய ஆக்‌ஷனையும் தந்திருக்கிற முருகதாஸுக்கு வாழ்த்துகள்.

No comments:

Post a Comment