Saturday, September 1, 2012

Mugamoodi Tamil Movie Review | முகமூடி திரை விமர்சனம்


தமிழ் சினிமாவில் முதல் சூப்பர் ஹீரோ படம் என்று பிரகடனப்படுத்தப்பட்ட படம். மிஷ்கின், ஜீவா, யுடிவி என்று ஒரு நல்ல டீம். நிச்சயம் ஒரு நல்ல படத்தை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையை கொடுத்திருந்தது.  அந்த நம்பிக்கையை லேசாய் ஆட்டிப் பார்த்தது இந்த படத்தின் ட்ரைலர்.  சரி..  நம்மாளு கொரிய, ஜப்பானிய படங்களையே இன்ஸ்பிரேஷனில் பின்னியெடுப்பவர். கிட்டானோவின் சிஷ்யர் என்று தன்னை சொல்லிக் கொள்பவர் பேட்மேன், சூப்பர் மேன் படங்களின் பாதியையாவது கொடுத்துவிடமாட்டாரா? என்ற எண்ணம் ஒரு மூலையில் கூவிக் கொண்டிருந்தது. 

இந்தியாவின் நான்கு திசைகளில் மூன்றில் கொள்ளையடித்துவிட்டு, கடைசியாய் நான்காவது திசையில் நகைகளை மட்டும், கொள்ளையடிக்கும் கும்பலைப் பிடிக்க அஸிஸ்டெண்ட் கமிஷன்ர் நாசர் வருகிறார். அதே ஊரில் வழக்கம் போல குவாட்டர் அடித்துக் கொண்டு, வீட்டில் திட்டு வாங்கிக் கொண்டு அலையும் இளைஞனாய் ஜீவா. ஜீவா ஒரு குங்க்பூ கற்றவர். தன் மாஸ்டரை தெய்வமாய் மதிப்பவர். கமிஷனர் பெண்ணை இம்ப்ரஸ் செய்வதற்காக சூப்பர் ஹீரோ ட்ரஸ் போட்டுக் கொண்டு அலைகிறார். ஒரு கட்டத்தில் வில்லன் கும்பல் அஸி. கமிஷனரை போட்டுத்தள்ள முயல, அதில் ஜீவா சிக்குகிறார். தான் குற்றமற்றவன் என்று நிருபிக்கவும், நிஜமான குற்றவாளியை கண்டுபிடிக்கவும் சூப்பர் ஹீரோ ட்ரஸ் போட்டு போராடுகிறான் அவன் எப்படி ஜெயிக்கிறான் என்பதுதான் கதை. 

சூர்யா, ஆர்யா எல்லாம் நைசாக எஸ்சாக, வழக்கம் போல எல்லோரும் விட்ட ப்ராஜெக்டை தன் கையில் எடுத்தால் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஜீவாவிடம் வந்து மாட்டியிருக்கிறது இந்த முகமூடி. ஆனால் பாவம் அவர் நம்பிக்கையில் இடியை விழ வைத்திருக்கிறார் இயக்குனர். ஜீவாவிற்கு கொஞ்சம் கூட நடிப்பதற்கு ஏதுவில்லாத கேரக்டர். சண்டைக் காட்சிகளில் அவரின் ஸ்ட்ரோக்குகளை விட எடிட்டர் வெட்டி ஒட்டிய ஸ்ட்ரோக்குகள் நன்றாக இருந்தது. இருந்தாலும் ஒரு சில இடங்களில் குறிப்பாய் மார்கெட் சண்டைக் காட்சிகளில் இவரது உழைப்பு தெரிகிறது. எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்.

பூஜா ஹெக்டே என்று ஒரு ”சப்பை” பிகர். எந்த ஆங்கிளில் பார்த்தாலும் வளைவு நெளிவே இல்லாத இவரை எல்லாம் எப்படித்தான் ஹீரோயினாய் தெரிந்தெடுத்தார்களோ? என்று பார்த்த மாத்திரத்திலேயே கேள்வியை எழுப்ப வைத்துவிடுகிறார்கள். படத்தில் இவருக்கும் ஒரு முகமூடியை தயார் செய்திருக்கலாம்.அவரின் அறிமுக காட்சியாகட்டும், அடுத்த காட்சியில் ஜீவாவை தகராறு செய்பவன் என்று நினைத்து தடி, பொடி, ஸ்பிரே, கல் என்று தொடர்ந்து தாக்கி அடிக்கும் காட்சியில் எல்லாம் படு கொடுமை. 

வில்லனாக நரேன். பாவம் இவரை எல்லாம் வில்லன் என்று சொன்னால் கூட நம்ப முடியாத வகையில் அமைக்கப்பட்ட கேரக்டர். சரி டைரக்டர் கூப்பிட்டு விட்டார் வேறு வழியில்லை என்று சென்னையின் ஹூயூமிடிட்டிக்கு சற்றும் ஒத்து வராத ஃபுல் கோட் எல்லாம் போட்டு கொள்ளையடிக்கிறார்கள். அதுவும் க்ளைமாக்ஸில் எல்லா சூப்பர் ஹீரோக்களின் பெயரைச் சொல்லி நடிக்கும் காட்சியெல்லாம் படு காமெடி. முடியலை.
ஒளிப்பதிவு சத்யா. வழக்கம் போல மிஷ்கினின் லோ ஆங்கிள் ஷாட்கள். நீளமான ஷாட்கள் என்று டெம்ப்ளேட் தான். கேமராமேனைச் சொல்லி குற்றமில்லை. அவர் என்ன செய்வார்?. இசை கே. வழக்கம் போல ஒரு டாஸ்மாக் குத்துப் பாட்டு, ஹிட்டான “வாயை மூடி சும்மா இருடா” வை தவிர, தனியாய் பின்னணியிசையைக் கேட்டால் நன்றாகவே இருந்தது. ஆனால் படத்தோடு பார்க்கும் போது அது கொடுக்கும் அறுவையை விட கூட சேர்ந்து பின்னணியிசை கொடுக்கும் இழுவை படு கொடுமையாக்குகிறது என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

எழுதி இயக்கியவர் மிஷ்கின். முதல் பாதியாவது ஏதோ வழக்கப்படி, ஜீவா, குடி, குங்க்பூ, என்று ஜல்லியடித்து ஓட்டிவிட்டார். இரண்டாம் பாகம் வந்ததுதான் கதை ஒரு இஞ்ச் கூட நகரமாட்டேன் என்கிறது. அதுவும், கதையை நகர்த்தும் எந்த விஷயமும் நமக்கு ஒட்டவேயில்லை என்பதால் எவன் எவனோட சண்டைப் போட்டால் என்ன என்ற எண்ணம் மேலோங்கி, வில்லனை ஹீரோ சேஸ் செய்யும் காட்சியில் எல்லாம் தூக்கம் சுழட்டு சுழட்டென்று அடிக்க ஆரம்பிக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு கதாநாயகி முதல் முறையாய் ஹீரோவின் “லுல்லா”வை பார்த்ததாய் காட்சி வைத்ததில் புதிய பரிமாணத்தை தொட்டிருப்பதை இங்கே சுட்டிக் காட்டியாகவேண்டும். 
ஊர் ஊராய் கொள்ளையடிக்கும் வில்லன் கும்பல் எதற்காக குங்க்பூ கற்று தரும் ஸ்கூல் நடத்த வேண்டும்?. அதுவும் ஒவ்வொரு இடத்திலும் ஒன்பது மாசமே இருந்து கொள்ளையடிப்பவர்கள்? ஜீவாவின் தாத்தாவாக வரும் கிரிஷ் கர்னாட் என்ன வேலை செய்கிறார்? ஏன் மொட்டை மாடி ஆஸ்பெஸ்டாஸ் ரூமில் கம்ப்யூட்டர், ரோபோ, எலக்ட்ரானிக் சாதனங்களை வைத்து பழைய ரேடியோ பெட்டி போர்டையெல்லாம் சால்டரிங் செய்கிறார்?. அதே வீட்டின் மொட்டை மாடியில் ஒரு குறுந்தாடி வைத்த தாத்தா சைனீஸ் எம்பஸிக்கு ட்ராகன் எல்லாம் ஆர்டர் எடுத்து தைத்துக் கொடுக்கும் அவரின் கேரக்டர் ஹீரோவுக்கு ட்ரெஸ் செய்வதற்காகவே வடிவமைக்கப்பட்டதா? பேரழகன் போல கூன் போட்ட ஒரு கேரக்டரினால் இந்த எழவு படத்திற்கு எந்தவிதத்தில் உதவியது?. நாசரின் உடன் வரும் பத்ரி என்கிற இன்ஸ்பெக்டர்தான் கரும்புள்ளி என்பதை படம் ஆரம்பிக்கும் முன்பே சொல்லி விடக்கூடிய அளவிற்கு நம் ரசிகர்கள் வளர்ந்திருக்கும் நேரத்தில் அந்த கேரக்டரை வைத்து ட்விஸ்ட் வைத்திருப்பதாய் நினைத்த உங்களின் திரைக்கதை அறிவை என்ன சொல்ல. குங்க்பூ மாணவன், எவனாவது தினமும் தன் உடல்நலத்தை பேணி பாதுகாக்காமல் குடிப்பானா? க்ளைமாக்ஸில் தாத்தாக்கள் இரண்டு பேர், கூன் முதுகு ஆள் எல்லாம் படு சுதந்திரமாய் வில்லனின் கூடாரத்தில் பஃபூன் வேடம் போட்டுக் கொண்டலைவது எல்லாம் உலகத்தரம். முதல் பாதியில் ப்ளூ ஸ்டாகின்ஸ் மேல் சிகப்பு கலர் ஜட்டி போட்டு வளைய வந்ததிற்கும், புதிய ஹைஃபை டிசைன் முகமூடி ட்ரெஸ்ஸுனாலும் படத்திற்கு என்ன பயன்?. கவசம் எல்லாம் வைத்து தைத்த உடையோடு வில்லன் ஒரு குத்து குத்தினால் ஹீரோவுக்கு வலிக்கிறது. ஜீவாவின் குருவிற்கும், நரேனுக்குமிடையேயான கதை எந்த விதத்தில் கதைக்கு உதவியிருக்கிறது?. இப்படி அபத்த களஞ்சியமாய் கேள்விகள் ஆயிரம் தொடர்ந்து கொண்டேயிருக்க, இது வரை நான் பார்த்த படு மொக்கையான கந்தசாமியையே நல்ல படம் என்று சொல்ல வைத்த உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.

குறிப்பிட்டு சொல்ல ஒரிரண்டு நல்ல விஷயங்கள் குறிப்பாய், குத்துப்பாட்டில் காட்டப்படும் கேரக்டர்கள் பல சுவாரஸ்யம். இவர் மதுபானக்கடை எடுத்திருந்தால் சுவாரஸ்யமான் இருந்திருக்கும்.சில பல மிஷ்கின் வகை ஷாட்டுகள், ஒரிரு வசனங்கள் என்று இருந்தாலும், அவையெல்லாம் ஞாபகத்திற்கே வராத அளவிற்கு  படத்தை அளித்த உங்களை என்ன சொல்லி வருத்தப்படுவது என்றும் தெரியவில்லை. உங்களின் முந்தையை படங்களை தலையில் வைத்துக் கொண்டாடிய ரசிகன் என்கிற முறையில் சொல்றேன். நல்லாருங்க.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
கேபிள் சங்கர்

No comments:

Post a Comment