Saturday, July 14, 2012

Billa 2 New Review in Tamil by : Cable Sankar | பில்லா -2


பில்லா -2

ஹிட்டான படத்தின் அடுத்த பாகமாய் ஆங்கிலத்தில் பல படங்கள் வெளிவந்திருக்கிறது. அதை தொடர்ந்து ஹிந்தி மற்றும் பல தென்னிந்திய மொழிகளிலும் படங்கள் வெளி வந்திருக்கிறது. முதல் முறையாய் தமிழில் ஏன் இந்திய படங்களில் ப்ரீக்யூவல் எனப்படும் முதல் பாகத்திற்கு முந்தைய கதை என்று எடுக்கப்பட்ட படம் பில்லா 2.
எடுத்த எடுப்பிலேயே அட்ரிலினை ஏற்றும் படியான ஒர் ஆக்‌ஷன் காட்சியில் தொடங்குகிறது கதை. அட.. என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு டைட்டிலில் காட்டப்படும் கருப்பு வெள்ளை படங்களிலேயே அஜித்தின் சாரி பில்லா .. டேவிட் பில்லாவின் ப்ளாஷ்பேக்கை சொல்லி விடுகிறார்கள்.  இலங்கையில் அகதியாய் வந்து இறங்குபவர் எப்படி பெரிய டான் ஆனார் என்பது தான் கதை. அதை நீட்டி முழக்கி, படு ஸ்டைலாய் இரண்டரை மணி நேரம் படம் பார்க்கிற ஆடியன்ஸை தவிர மற்ற எல்லாரையும் சுட்டுச் சுட்டே சொல்லியிருக்கிறார்கள்.
படத்தின் மேக்கிங், மற்றும் ப்ரொடக்‌ஷன் வேல்யூவெல்லாம் அசத்தல் என்றால் அவ்வளவு அசத்தல். நிஜமாகவே படத்தின் ஹீரோ யார் என்றால் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகரும், சுரேஷ் அர்ஸின் எடிட்டிங்கும்தான். தான். ரெட் எபிக் கேமராவில் படு துல்லியமான ஒளிப்பதிவு, கலர் டோன், ஹாலிவுட் பட லெவலுக்கான ஷாட்டுகள் என்று பிரம்மிக்க செய்யும் ஒளிப்பதிவு. எடிட்டிங்கின் திறமை சண்டைக் காட்சிகளில் மிளிர்கிறது.

அஜித் வழக்கம் போல ஸ்மார்ட்டாக இருக்கிறார். மற்றபடி நடிக்கவெல்லாம் முயற்சியே செய்யவில்லை. அதற்கான காட்சிகளும் படத்தில் இல்லை என்பதால் அவரைக் குறை சொல்ல முடியாது. படம் நெடுக படம் பார்க்கிற ஆடியன்ஸைத் தவிர சுமார் நூறு பேரையாவது மிஷின் கன், சாதாரண் பிஸ்டல், கலானிஷ்கோவ்,  ஏகே 47 என்று வகை வகையான துப்பாக்கிகளிலும், தக்குணூயூண்டு கத்தியில் சதக் சதக்கென குத்தியும் சாய்க்கிறார். பல இடங்களில் ரசிகர்கள் அவர்கள் உடம்பில் பட்ட கத்திக் குத்தாகவே ஃபீல் செய்து கத்தியது ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு என்று நினைத்தால் அது அவதானிக்கிறவர்களின் தவறு.
புருனோ அப்துல்லா, ஓமனக்குட்டன் என்று ரெண்டு ஹீரோயின்கள். பிகினியில் ஒருத்தி, டைட் சட்டையில் ஒருத்தி என்று ஆளாளுக்கு கவர்ச்சியாய் வந்தாலும் ஒண்ணும் ஏறத்தான் மாட்டேனென்கிறது. நடுவில் விபசாரவிடுதியில் ஆடும் பெண்கள் கொஞ்சம் கிளுகிளூப்பை ஏற்றுகிறார்கள். வில்லன் என்று ரெண்டு பேர் கல் போன்ற இறுகிய முகத்துடன் எப்பப்பார் புட் மசாஜ் செய்து கொண்டு பிஸினெஸ் டீல், என்று பேசுகிறார். இன்னொருவர் பொலிவியாவில் சப்டைட்டிலிலேயே பேசுகிறார். க்ளைமாக்ஸில் சாகிறார் இதைவிட வேறு ஏதும் சிறப்பான வேலையை செய்ததாய் ஏதும் தெரியவில்லை.

வசனம் இரா.முருகன் மற்றும் இன்னொருவரின் பெயரைப் போட்டார்கள். நிறைய இடங்களில் வெகு ஷார்பான வசனங்கள் மிக குறைந்த வரிகளில். அதுவும் அஜித் மாதிரி ஹீரோ பேசும் போது நிறைய அழுத்தம் கிடைக்கிறது. ஆனால் எல்லாமே விழலுக்கு இறைத்த நீராய் போய்விட்டது.  இசை யுவன் சங்கர் ராஜாவாம். பின்னணியிசையில் ஓகே ஆனால் பாடல்கள் ஏதும் நினைவில் நிற்கவேயில்லை. 
அஜித்தின் கால்ஷீட் கிடைத்துவிட்டது. சரி பில்லா என்ற ஒருவன் எப்படி உருவானான் என்பதுதான் கதை என்றாகிவிட்டது. பிறகு அதற்கான கதை என்ற வஸ்துவை கொஞ்சமாவது யோசித்திருக்கலாம். அல்லது ஒரு நல்ல லைனை வைத்து நல்ல திரைக்கதை அமைத்திருக்கலாம். எந்த ஒரு கேரக்டருக்கும் எந்த ஒரு விளக்கமும் இல்லாது தடாலடியாய் அறிமுகப்படுத்துகிறார்கள். ஆரம்பக் காட்சிகள் எல்லாம் அப்படியே நாயகன் படத்தின் ரீமேக். ஒரு சாதாரண அகதி ஏன் கடத்தல் தொழிலில் இறங்குகிறான். ஏன் அவனுக்குள் காதல் போன்ற இத்யாதிகள் வருவதில்லை. எதனால் அவன் டான் ஆகிறான் எனபதற்கான காரண காரியம் ஏதுமில்லாமல் ஏதோ லாரியில் டைமண்ட் கடத்துகிறார்கள் என்று பெரிய சைஸ் கல்கண்டு போல ஒன்றை காட்டுகிறார்கள். உலகமெல்லாம் பறக்கிறார்கள். சென்னைக்கும், கோவாவிற்கும் துரத்துகிறார்கள். ஆளாளுக்கு சுட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.  இரண்டு ஹீரோயின்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்திருக்கிறார்கள். அதிலும் க்ளைமாக்ஸில் ஓமனக்குட்டன் நான் திரும்ப வர முடியாத இடத்துக்கு போறேன் என்று சொல்வதெல்லாம் படு அபத்தம். முதல்பாதியைக் கூட ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் ரெண்டாம் பாதி வந்ததும் என்ன செய்வது என்றே தெரியாமல் யார் தான் பில்லாவுக்கு வில்லன் என்றில்லாமல் இலக்கில்லாமல் ஓடுகிறது திரைக்கதை. சீக்கிரம் சுட்டு முடியுங்கப்பா என்று புலம்ப வைத்துவிட்டார் சக்ரி டோலட்டி.

ஸ்டைலான மேக்கிங் மட்டும் படத்தை காப்பாற்றும் என்று நம்பியிருக்கிறார்கள். ஓவர் ஸ்டைல் உடம்புக்கு ஆகாது என்பதை இப்போது புரிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஊரெல்லாம் டிக்கெட் இலலை என்று சொன்னவர்களுக்கு.. எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் தியேட்டரில் காலைக்காட்சிக்கு நேரில் சென்று வாங்கினேன். டிக்கெட் விலை 100. நாற்பது சீட்டுகள் விற்பனையாகாம்ல் இருந்தது.
கேபிள் சங்கர்

2 comments:

  1. padam pothuva nalla erukku ok!
    ellaathukkum kaaranakaariyam kettukittu erunthaa ovvoruththarukkum thanithani padamthan edukkanum.
    500 thiraiyarangil padam veliyidumbothu sila edangalil sit kaliyaga erukkaalaam .athukkaaga unga veruppa thinikkaathinga .

    padam ok

    kurai solvathu romba elithu ! neenga solrathai seythirunthaa athai ennoruththaar kurai solliruppaar ennaikkellaam 100 % ellaarukkum pidiththu padampannamudiyaathu.
    yaaraiyum yaarum oreadiyaa mattam thattaathinga .

    ReplyDelete
    Replies
    1. Ungalathu comments ku nandri eninum ithu en pathivalla tholare
      http://www.cablesankaronline.com/2012/07/2.html poi nalla kelunga ;)

      Delete